நியூயார்க்: சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகமான பூஸ்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது விழலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீன ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுவது இது முதல் முறையல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன ராக்கெட்டின் பாகங்கள் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் மீது விழ உள்ளது இது 4-வது முறை என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் விண்வெளி குப்பைகள் தரையில் விழுந்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை 10,000ல் ஒருவருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதியை கண்டிப்பாக கடைபிடிக்கின்றன. ஆனால், சீனா இந்த வரம்பை மீறி செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சீனாவிலிருந்து லாங் மார்ச் 5பி ராக்கெட் கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஏவப்பட்டது. இந்த ராக்கெட், சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்கை கட்டமைப்பதற்கு உதவியாக அனுப்பப்பட்டது. தற்போது, இந்த ராக்கெட்டின் பாகம்தான் அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி பூமியில் விழ உள்ளது. இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
லாங் மார்ச் 5பி வகை ராக்கெட் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. அந்த ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டலத்தில் நுழையும்போது பெரும்பாலும் எரிந்து சாம்பலாக கூடியது. இதனால், பூமி மற்றும் விமான நடவடிக்கைகளுக்கு அந்த ராக்கெட்டின் பாகங்கள் தீங்கு விளைவிக்கும் நிகழ்வு மிகக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.
சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் சுற்றுவட்டப்பாதையில் இருந்து வெளியேறி வளி மண்டலத்துக்குள் நுழையும்போது அவை பெரும் பாலும் எரிந்து சாம்பலாகி விடுவதால் பூமியில் விழும்போது அதனால் குறைந்த அளவே பாதிப்புகள் ஏற்படுகின்றன.