கலவரம் நடத்த முயல்கிறதா ஆர்.எஸ்.எஸ்? அமைச்சர் குற்றச்சாட்டு!

பேரணி மூலம் கலவரத்தை நடத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் பருவகால மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால் 98 சதவீத பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் பெருமழை பொழிந்தபோதும் சென்னைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் கூறுகின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதோடு மருத்துவ முகாம்களை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 200 வார்டுகளில் மழைக் கால மருத்துவ முகாமை நடத்துகிறது.

சென்னையில் 156 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 44 கிமீ தூரத்துக்கு பணிகள் முடிந்தால் அடுத்த ஆண்டு பருவ மழைக்கு பிரச்னை வராது. பள்ளங்கள் உள்ள பகுதிகளில் சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும்” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “மக்களை பற்றி அக்கறை இல்லாமல், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி மூலம் கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதலமைச்சர் அனைத்து முடிவும் எடுப்பார்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.