விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் ரெங்கநாயகி. இவரது தம்பி சூரியநாராயணன் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறார். தம்பி அனுப்பும் பணத்தில் ரெங்கநாயகி விருதுநகரில் இடங்களை வாங்கியுள்ளார். இதை அறிந்த திண்டுக்கல் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாபன் என்பவர், ரெங்கநாயகி மற்றும் அவரது மற்றொரு தம்பி வீரபாண்டியன் ஆகியோரை கடந்த 2020, நவம்பரில் அணுகி உள்ளார். அப்போது, ‘நான் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன்.
மதுரை வண்டியூர் கிராமத்தில், நாச்சாரம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமாக 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் உள்ளது. அதன் நிர்வாகிகள் குழந்தைசெல்வம், சந்திரன் ஆகியோர் எனக்கு பவர் எழுதி கொடுத்துள்ளனர். உங்களுக்கு நிலம் வேண்டும் என்றால், வாங்கி கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து வந்தால், பேசி கொள்ளலாம் என ரெங்கநாயகி கூறி உள்ளார். இந்நிலையில், கடந்த 11-1-2021ல் பத்மநாபன், சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தைசெல்வம் ஆகியோர் ரெங்கநாயகி வீட்டிற்கு வந்துள்ளனர்.
நிலத்தில் எவ்வித வில்லங்கமும் இல்லை என தெரிவித்தனர். ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் என விலைபேசி, ரூ.50 லட்சத்தை முன்பணமாக ரெங்கநாயகி மற்றும் சகோதரர் வீரபாண்டியனிடம் பெற்றுள்ளனர். பின் 16.7.2021ல் பத்மநாபன், சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் ரெங்கநாயகியிடம் மேலும் ரூ.20 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தால், விரைவில் நிலத்தை பதிவு செய்து கொடுத்து விடுவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுள்ளனர். ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை பதிவு செய்து தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த ரெங்கநாயகி விசாரித்தபோது, அந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரெங்கநாயகி அளித்த புகாரின்பேரில் பத்மநாபன், அவரது மகன் சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தைசெல்வம் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.