`காலில் பாய்ந்த தோட்டா; நூலிழையில் உயிர்தப்பிய இம்ரான் கான்!' – பற்றியெறியும் பாகிஸ்தான் அரசியல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அந்தநாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நாடுமுழுவம் அவரது பி.டி.ஐ கட்சித் தொண்டர்கள் கடுமையானப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இம்ரான் கான்

இம்ரான்கான் Vs ஆளுங்கட்சி மோதல்:

கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பிலிருந்து இம்ரான் கான் பதவி விலகியதிலிருந்தே, புதிதாக ஆட்சிக்கு வந்த ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் இம்ரான்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. குறிப்பாக, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் வெளிநாட்டு பிரமுகர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கி, விற்றதாகவும், அதுகுறித்தான கணக்குவழக்குகளில் தவறானத் தகவல்களை அவர் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான் கான் பொதுப் பதவிகள் எதையும் வகிக்கக்கூடாது என உத்தரவிட்டு, அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

அரசுக்கு எதிராகப் பேரணி:

இந்த உத்தரவை எதிர்த்த இம்ரான் கான், “எனக்கு எதிரான உத்தரவு அரசியல் நோக்கம் கொண்டது; ஊழல்வாதிகளின் கையில் பாகிஸ்தான் சென்றுவிட்டது. ராணுவமும், உளவுத்துறையும் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகிறது. எனவே, ஆளும் அரசாங்கத்தை அகற்ற உடனடியாக மறுதேர்தல் நடத்த வேண்டும்!” என கோரிக்கை விடுத்தார். மேலும், தனக்கெதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த தனது பி.டி.ஐ கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்தார். அதைத்தொடர்ந்து, நேற்று (நவம்பர் -3) `நீண்ட பயணம்’ எனும் பெயரில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணி போராட்டத்தைத் தொடங்கினார்.

இம்ரான் கான்

மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூடு:

பேரணி செல்லும் வழியில் குஜ்ரன்வாலா பகுதிலுள்ள அல்லாவாலா சவுக் என்ற இடத்தில், கன்டெய்னர் லாரிமீது ஏறி தொண்டர்கள் மத்தியில் உரையாடுவதற்குத் தயாரானார். அப்போது திடீரென லாரிக்கு கீழே தொண்டர்கள் கூட்டத்தில் மறைந்திருந்த இரண்டு மர்ம நபர்கள், இம்ரான் கானை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், இம்ரான் கானின் வலதுகாலில் துப்பாகி குண்டு பாய்ந்து அவர் கீழே சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் உடனே இம்ரான் கானை பாதுகாப்பாக தாங்கிப்பிடித்து, அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இம்ரான் கான் மட்டுமல்லாமல் அவரது நண்பர் பைசல் ஜாவேத், பி.டி.ஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சுடப்பட்ட இம்ரான் கான்

ஏன் சுட்டோம்?

இம்ரான் கானை சுட்டவர்களில் ஒருவர் தப்பியோட, மற்றொரு நபரைத் தொண்டர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்து, காவல்துறை விசாரணை மேற்கொண்ட வாக்குமூல வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், “மக்களைத் தவறாக வழிநடத்தியதால், பேரணி தொடங்கும் நாளிலேயே இம்ரான் கானை சுட்டுக்கொல்ல விரும்பினேன்; முயன்றேன்” என துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இம்ரான் கான் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?

லாகூரில் உள்ள சௌகத் கானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இம்ரான் கானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இம்ரான் கானின் உடல்நிலை தற்போது தேறிவருவதாக பி.டி.ஐ கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஷெபாஸ் ஷெரீஃப் – பாகிஸ்தான் பிரதமர்

வெடித்த போராட்டம்:

இந்த நிலையில், இம்ரான் கான் சுடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் கட்சித் தொண்டர்கள், இதற்கு காரணம் ஆளும்கட்சியினர்தான் எனக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சனுல்லாவின் வீட்டை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் தொடர் ஆர்ப்பாட்டத்தையும் பி.டி.ஐ தொண்டர்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உடனடி புலன்விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.