கெஸ்ட் ரோலில் ரஜினி; ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் `லால் சலாம்' படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?

மீண்டும் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவதாரம் எடுக்க, லைகா தயாரிப்பில் இன்று ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலாவந்தன. அதன்படி, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது லைகா. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார்.

ஹீரோக்களுடன்.. ஐஸ்வர்யா ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநரானது குறித்து நாம் முன்பே கோலிவுட் ஸ்பைடரில் தகவல் சொல்லியிருந்தோம். அந்தப் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் சொல்லியிருந்தோம். ‘தர்பார்’ சமயத்திலிருந்தே, லைகா நிறுவனர் சுபாஷ்கரன், ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவிடம் ‘உங்க அடுத்த டைரக்‌ஷன் எப்போ? அந்தப் படத்தை லைகா தயாரிக்க விரும்புகிறது’ எனச் சொல்லிவந்தார். அதன்படி இப்போது லைகா தயாரிப்பில் படம் பண்ணுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஆரம்பத்தில் அதர்வாதான் இதில் நடிப்பார் என்றார்கள். ஆனால், அதர்வா ஏற்கெனவே லைகாவின் தயாரிப்பில் ‘வாகை சூடவா’ சற்குணம் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறார். அதன் படப்பிடிப்பு கடந்த வருடத்திலேயே நடந்து முடிந்துவிட்டாலும், இன்னும் அது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

விஷ்ணு விஷால், விக்ராந்த்

‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஐஸ்வர்யாவின் ‘பயணி’ ஆல்பத்திற்கு ஒளிப்பதிவு செய்த விஷ்ணு ரங்கசாமி, இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் ஆகிறார். படத்திற்கான பூஜை இன்று நடந்திருந்தாலும், படப்பிடிப்பு தொடங்க பிப்ரவரிக்கு மேல் ஆகலாம் என்கிறார்கள். கிரிக்கெட் தொடர்பான கதை இது. ரஜினி முக்கியமான சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே ரஜினியின் 170வது படத்தையும் லைகாவே தயாரிக்கிறது. ‘டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அரவிந்த் சாமி, கல்யாணி பிரியதர்ஷன், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார் என்ற பேச்சு உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் இருக்கும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.