கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு காவல்துறையிடமிருந்து விசாரணைகள் பற்றிய அறிக்கைகள்தான் எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த சம்பத்திற்கு பிறகு பா.ஜ.க தரப்பில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் கேள்விகளையும், ஆளும் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருவதோடு, காவல்துறை விசாரணையின் தன்மையையும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது. இதனால் விசாரணை அறிக்கைகள் தாண்டி, இரு கட்சிகளின் பேச்சுக்கள், பேட்டிகள், அறிக்கைகள் என பரபரப்பாகியிருக்கிறது தமிழ்நாடு.
அந்த வகையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டுகள், கேள்விகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக ஆவதை உணர்ந்த காவல்துறை தலைமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ-விற்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கேற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது? தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.
அவர் குறிப்பிடுவது, புது டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை எதிர்வினை ஆற்றியிருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
காவல்துறையின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல கேள்விகளை தொடுத்துள்ளார். அதில், “கடந்த 23-ஆம் தேதி நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?
அக்டோபர் 21-ஆம் தேதி ஜமேஷா மூபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா? இறந்த ஜமேஷா மூபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல் துறை இதை மறுக்குமா?
கைது செய்யப்பட்ட 5 பேர் மீது UAPA சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். இந்த கேள்வி எழுப்பி சரியாக 3 மணி நேரத்திற்கு பின்பு கோவை மாவட்ட ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து புலன் விசாரணையில் பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு சட்டம் போட்டதாக கூறினார். இதிலிருந்து தெரியவில்லையா தங்கள் தலைமையிலான காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று.
18-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும், இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இலை என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல்துறை தலைமை முன்வைத்துள்ளது. மேலும் 18-ஆம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ஆம் தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பொய். 21-ஆம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
கர்நடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநில அரசு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறை மறுக்குமா?
21-ஆம் தேதி அனைத்து காவல் ஆணையாளர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?
அக்டோபர் 23-ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபீன் 89-ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூலை மாதம் 19-ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா மூபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.
1998-ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தன போக்கே. சென்ற வாரம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணம் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களும், டிஜிபி சைலேந்திர பாபு அவர்களும் தான். மிதிவண்டி ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தை தன் பணியில் காட்டியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார் அண்ணாமலை.
தொடர்ந்து திமுக தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் செய்தி தொடர்பு இணைச்செயலாளர் இராஜீவ் காந்தி, “தினந்தோறும் தனக்கு அறிக்கையை வேண்டும் என்ற முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி இருக்கிறார். கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவரின் அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. கோவையில் 23-ஆம் தேதி காலை நான்கு மணிக்கு விபத்து நடந்ததாக சொல்லப்படும் போது முதலில் போய் அந்த எரிந்த காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர் அவர் எந்த ஜாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து தன்னுடைய காவல்துறை வேலையை செய்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என்ற உளறல்களை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.
மேலும் “உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கோவை பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான பின்பு ஒரு அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால் அந்த மக்களிடம் போய் விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலை கொண்டு வருவதுதான் அரசியல் கட்சியின் வேலை. ஆனால் அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம், யாரும் தொழில் செய்யாதீர்கள், கடையை திறக்காதீர்கள் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்யாதீர்கள் என்பதைபோல் கோவையை எப்போதும் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடானது” என்று விமர்சித்துள்ளார். இப்படி, கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை vs திமுக, காவல்துறை என விவகாரம் இன்னும் சூடாகவே தொடர்கிறது..!