தமிழ் திரைப்படத்தின் உட்ச நட்சத்திரமாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தபடத்தில் கம்பேக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கும் அவர், மாவீரன் படத்தின் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படத்தின் 40 சதவீத சூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கும் நிலையில் திடீரென படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முனபு வெளியான படங்களில் கூட, இயக்குநரின் முடிவில் சிவகார்த்திகேயன் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
சிவகார்த்திகேயன் விரும்பும் வகையில் மட்டுமே படம் இருக்க வேண்டும், காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கறார் காட்டுதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதனால், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பலரும் தங்களின் கதையை முழுமையாக படமாக எடுக்க முடியாமல் வெதும்பியதாக தகவல் பரவியது. ஹீரோ படத்தின் தோல்விக்குகூட சிவகார்த்திகேயனின் அதீத தலையீடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இப்போது மாவீரன் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுடனும் மோதல் ஏற்பட்டதாக பரவும் தகவல் சிவகார்த்திகேயன் மீது இயக்குநர்கள் மத்தியில் நெகடிவ் இமேஜ் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் படத்தின் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.