சென்னை: சென்னையில் சாலையில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீர்செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். முதல்வர் மழை வெள்ள பாதிப்புகளை நாள்தோறும் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வல்லுநர் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளின்படி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டாண்டு காலத்தில் முடிக்கக் கூடிய பணிகளை 6 மாத காலத்தில் விரைந்து முடித்த காரணத்தினால் இந்த ஆண்டு பருவமழையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேக்கம் இல்லை. மழைநீர் தேங்கிய ஒரு சில இடங்களிலும் நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பெய்துள்ள மழையின் காரணமாக பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகள் மழைநீர் வடிகால்களில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்வழிக் கால்வாய்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் பணி, மாநகராட்சியின் சார்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலைகளில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பருவமழைக்குப் பின்னர் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளும் முழுமையாக சீர்செய்யப்படும்.
சென்னையில் 27,000 சாலைகள் உள்ளன. அதனை சீர்செய்ய ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் உறுதியாக சீர்செய்யப்படும்” என்று அமைச்சர் கூறினார்.