தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் சென்னையில் காலமானார்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் அன்பில் படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் மற்றும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்(79). தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றிய அவர், 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.

அண்மையில் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார். திராவிட இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இந்நிலையில், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுஞ்செழியன், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நெடுஞ்செழியனின் உடல், திருச்சி கலைஞர் கருணாநிதி நகரிலுள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு சொந்த ஊரான அன்பில் படுகை கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவருக்கு மனைவி சக்குபாய். மகள்கள் நகைமுத்து, குறிஞ்சி ஆகியோர் உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

அவர் உடல் நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஏற்பாடுகளைச் செய்தோம். ஆயினும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார். அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில், “திராவிட இயக்கச் சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், திராவிட இயக்கச் சிந்தனையில் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியவரும், அண்மையில் தமிழக அரசின் ‘செம்மொழி விருது’ பெற்றவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவரது மறைவு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழர்களுக்கும், திராவிட இயக்கத்துக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.