தமிழ்நாட்டு பெண்ணுக்கு கர்நாடகாவில் நடந்த சோகம் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: வீட்டிலேயே பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள், தாய் மரணம்

பெங்களூரு: ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் ‘தாய்’ அட்டை இல்லாததால், தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணியை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பினர். வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு பிரசவம் ஆனதில் கஸ்தூரியும், அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டம், பாரதி நகரை சேர்ந்தவர் கஸ்தூரி (30). தமிழகத்தை சேர்ந்த இவரின் கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், தனது ஒரு மகளுடன் தனியாக கஸ்துரி  வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த பெண் மருத்துவர், ஆதார் அட்டை அல்லது சுகாதார தாய் அட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார். அவை இல்லாததால், சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறினார். இதனால், அவரை அழைத்து வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்களிடம் கெஞ்சினர். இதனை மருத்துவரும், செவிலியர்களும் ஏற்கவில்லை. தேவைப்பட்டால், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி வெளியே அனுப்பினர்.

ஆம்புலன்சில் பெங்களூரு செல்ல பணம் இல்லாததால்,  கஸ்தூரி இரவு வீடு திரும்பினார். மறுநாள் காலை மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பிரசவம் குழந்தைகள் பிறந்தது. முதலாவதாக, ஆண் குழந்தை பிறக்கும் போது அதிக இரத்தப்போக்கு இருந்தது. மற்றொரு ஆண் குழந்தை பிறக்கும் முன்பாகவே, அதிக ரத்த போக்கு ஏற்பட்டு கஸ்தூரி உயிரிழந்தார். தொடர்ந்து, 2 குழந்தைகளும் உயிரிழந்தன. இதனால், அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். ஆதார்  அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரால், தாயும், இரட்டை குழந்தையும் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. ஏற்கனவே  தந்தையை இழந்த கஸ்தூரியின் பெண், தற்போது தாயையும் இழந்து ஆதரவற்று நிற்கிறது.  

* எப்படி நடந்தது தெரியவில்லை
துமகூரு மாவட்ட மருத்துவமனை அறுவை சிகிச்சை டாக்டர் வீணா கூறுகையில்,  ‘இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. அந்த பெண்  மருத்துவமனைக்கு எப்போது வந்தார்  என்பது தெரியவில்லை. ஒருவேளை கஸ்தூரி  மருத்துவமனைக்கு வந்திருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

* மருத்துவர், நர்சுகள் சஸ்பெண்ட்
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் கர்நாடகா சுகாதார அமைச்சர் சுதாகர், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘பிரசவத்திற்காக அந்த பெண் வந்த போது மருத்துவமனையில் பணியில் இருந்த  டாக்டரும், நர்ஸ்களும் கடமையை செய்வதற்கு மறந்துள்ளனர். மிகவும் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. தாய் அட்டை, ஆதார் அட்டை இல்லை என்றாலும் முதலில் பிரசவ வார்டில் அவரை அனுமதித்து இருக்க வேண்டும். இதை செய்ய தவறிய அனைவரும் குற்றவாளிகள் தான். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதைத் தொடர்ந்து, பணியில் இருந்த மருத்துவர், நர்சுகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.