பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் பள்ளிகள் துவங்கி ஐந்து மாதங்களாகியும், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்கப்படவில்லை; இது, சமூக அநீதி. மருத்துவம் படிக்க விரும்பும், அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில், பள்ளிக்கல்வித் துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலை அளிக்கிறது.
‘நீட்’ தேர்வு ரத்தாகும் என, இன்னுமா இந்த அரசு நம்பிக்கிட்டு இருக்குது?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது; இருவர் இறந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. சென்னையில் வடிநீர் கால்வாய் திட்டத்தை அரைகுறையாக செய்துள்ளனர். இதை அரசு சரியாக கண்காணிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறி விட்டது.
இதுபற்றி கேட்டால், அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சி மீது தானே முதல்வர் புகார் சொல்றார்!
மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேலு அறிக்கை:
ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளித்ததை காண முடிந்தது. சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் ஒரு ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளனர். இனி, ஒரு உயிரைக்கூட மழைக்கு பறிகொடுக்காத அளவுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
வந்த பின் நிவாரணம் என்பதை விட, வரும் முன் காப்பதே சிறந்த நிர்வாகமா இருக்கும்!
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
தமிழகத்தில், ஜனநாயகப் படுகொலையை நடத்துவதற்கு கவர்னர் ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரையும் ஆயுதமாக பயன்படுத்த பா.ஜ., முயல்கிறது. பூனைகள் வெளியே வந்து விட்டன. இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்து விட்டது. இத்தகைய சக்திகளிடமிருந்து, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற வகுப்புவாத எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர சூழல் உருவாகியிருக்கிறது.
உடனே ராகுலுக்கு போனை போடுங்க… பாதயாத்திரையை ரத்து பண்ணிட்டு, தமிழகத்துக்கு வந்து போராட சொல்லுங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
‘உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள வசதியாக, 100 நாள் வேலை திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும்’ என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது; இது வரவேற்கத்தக்கது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, இனி விவசாயம் சார்ந்த பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். இதனால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை மாறும்.
நல்ல விஷயம் தான்… ஆனாலும், 100 நாள் வேலை திட்டத்தில் மஞ்ச குளிக்கும் பலருக்கும், இது கசப்பாகவே இருக்கும்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்