சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்கை கட்டமைப்பதற்கு உதவியாக ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் பாகமான பூஸ்டர் அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது. இந்த பாகம் பூமியில் எந்நேரமும் விழலாம் என அஞ்சப்பட்டது. மேலும், மிகப்பெரிய பாகமான பூஸ்டர் பூமியின் எந்த பகுதியில் விழப் போகிறது என்பதும் தெரியாமல் இருந்தது. இதனால், மிகப்பெரிய சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பூமியின் மீது எந்நேரமும் விழலாம் என்று அஞ்சப்பட்ட கட்டுப்பாட்டை இழந்த சீன ரக்கெட்டின் மிகப்பெரிய பூஸ்டர் பாதுகாப்பாக பசுபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. 23 டன் எடை கொண்ட அந்த ராக்கெட்டின் துண்டுகள் தென்-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்ததாக அமெரிக்க விண்வெளிக் கட்டளை அமைப்பு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
கடலில் விழுந்தாலும், அதன் பாகங்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும், பாதுகாப்பு நடவடிக்கையாக, ஸ்பெயின் சில பகுதிகளில் வான்வெளியை மூடியதாகவும், இதன் காரணமாக சுமார் 300 விமானங்கள் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுவது இது முதல் முறையல்ல. லாங் மார்ச் 5B ராக்கெட்டை உள்ளடக்கிய கட்டுப்பாட்டை இழந்த பாகம் பூமியில் விழுவது இது நான்காவது முறையாகும்.
பாதுகாப்பான தரையிறக்கத்தை வழிநடத்தும் திறன் இல்லை சீன ராக்கெட்டுக்கு இல்லை என நிபுணர்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். நாசா நிர்வாகி பில் நெல்சன், ‘தேவையற்ற அபாயங்களை’ சீனா மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். தரையிறங்கும் மண்டலங்களைக் கணிக்கவும், ஆபத்தைக் குறைக்கவும் தேவைப்படும் குறிப்பிட்ட பாதைத் தகவலை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் உயிரிழப்பு மற்றும் பெரிய சேதங்களுக்கு வழிவகுக்கும், எனவே நாடுகள் தங்கள் விண்வெளி நடவடிக்கைகளில் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பது முக்கியம் என்றும் பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனா தனது ராக்கெட்டால் பூமிக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக தெரிவித்தது. “லாங் மார்ச் 5பி வகை ராக்கெட் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. அந்த ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டலத்தில் நுழையும்போது பெரும்பாலும் எரிந்து சாம்பலாக கூடியது. இதனால், ராக்கெட்டின் பாகங்கள் தீங்கு விளைவிக்கும் நிகழ்வு மிகக் குறைவு.” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.