அமிர்தசரஸ், பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிவசேனா கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் சுதிர் சூரி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், அமிர்தசரஸ் நகரின் பரபரப்பான மஜிதா சாலையில் அமைந்துள்ள கோபால் மந்திர் அருகே நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது, திடீரென சுதிர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.
அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, கட்சியினர் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், சுதிர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். சுதிர் உடலில் ஐந்து இடங்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன.
சுதிருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்ததால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம், சிவசேனா தலைவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் அஸ்வானி சர்மா, “பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் மாநிலம் இல்லை,” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அமிர்தசரஸ் போலீசார், ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement