பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு

டெல்லி: வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது.

டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கூறுகையில்; டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா நகரில் காற்று தர குறியீடு 529 ஆக பதிவாகி உள்ளது. அரியானாவுக்கு உட்பட்ட குருகிராம் நகர் (478) கடுமையான பிரிவிலும் அதன் அருகே உள்ள தீர்ப்பூர் நகர் (534) கடுமையான பிரிவிலும் உள்ளன.  

டெல்லியில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே பனி சூழ்ந்தது போன்ற காட்சிகள் காலையிலேயே காணப்படுகின்றன. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சமீபத்தில் உலக காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  

எனினும் இதில் டெல்லி இடம்பெறாமல் இருந்தது. ஆனால் தீபாவளி அன்று அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து விட்டது என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.  பட்டாசு வெடிக்க தடை, அபராதம் என விதிக்கப்பட்டபோதும், அதனை மீறி பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  இதனால் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.