தனியார் பள்ளிகள், நடப்பு 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் கோரியோ, அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப்பிக்கும் போது, பள்ளி கட்டிடத்துக்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசாணை 76 ன்படி, பள்ளி கட்டிடங்களுக்கு வரன்முறை தொடர்பான விண்ணப்பம் அளித்து, அதன் நகலை சமர்பித்தால் மட்டுமே கல்வித்துறையால் தொடர அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நிபந்தனை, 2011 முன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பொருந்தாது என வாதிட்டார்.
அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் 47 ஏ பிரிவு அமலுக்கு வந்த 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்களுக்கு மீண்டும் கட்டிட அனுமதியோ, திட்ட அனுமதியோ பெறுவது கட்டாயமில்லை எனவும், 2011ம் ஆண்டுக்கு பின் கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2011ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியமில்லை என உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால், அவற்றுக்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுக்களுடன் அதற்கான ஆதாரத்தை இணைத்திருக்க வேண்டும் என தெளிவுபடுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலிக்கவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டுக்கு பின் பள்ளிகள் எந்த கட்டுமானங்களையும் கட்டியிருக்காவிட்டால், அதுகுறித்த அறிவிப்புடன் அங்கீகாரத்தை நீட்டிக்க கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார்.