பாஜக சீக்ரெட் டீல்: பப்ளிக்கில் போட்டுடைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகினால், சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோரை, வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பதாக, பாஜக பேரம் பேசியதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜகவும், காங்கிரசும் கணவன் – மனைவி / சகோதரர் – சகோதரி உறவை கொண்டுள்ளன. தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே தான் போட்டி என அமித் ஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காங்கிரசும் இதே மன நிலையில் தான் உள்ளது. பாஜகவின் மனைவியாக காங்கிரஸ் செயல்படுகிறது. பாஜகவின் பாக்கெட்களில் அக்கட்சி உள்ளது.

27 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் தளர்ந்து போயுள்ளனர். மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். குஜராத்தில் எந்த டிவி விவாதத்திற்கும் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்களை அழைக்கக் கூடாது என பாஜகவினர் மிரட்டுகின்றனர். அங்கு மணீஷ் சிசோடியா குறித்து விவாதம் நடக்கும். ஆனால், அதில் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். அவர்கள் இடையே உள்ள கணவன் – மனைவி / சகோதரன் – சகோதரி உறவு தற்போது வெளியில் தெரிய துவங்கியுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும், டெல்லி மாநகராட்சி தேர்தலையும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவால் குறிவைக்கப்பட்டது அனைவருக்கும் புரியும். இது பாஜகவுக்கு உள்ள பயத்தையும் காட்டுகிறது. இரண்டு இடங்களிலும் வெற்றி பெற முடியும் என பாஜக நினைத்திருந்தால், இப்படி செய்திருக்கக் கூடாது. ஆனால், குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோற்று விடுவோம் என அக்கட்சி பயப்படுகிறது. இதனால், தான் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டனர்.

ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறினால், முதலமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாக கூறியதை

மணீஷ் சிசோடியா ஏற்க மறுத்தார். இதனால், தற்போது அவர்களின் கவனம் என் மீது திரும்பி உள்ளது. குஜராத்தில் போட்டியிடாமல் விலகினால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை தெரிவித்தவர்களின் பெயரை வெளிப்படையாக கூற முடியாது. பாஜக நேரடியாக என்னை அணுகவில்லை. ஒருவர் பின் ஒருவர் என நண்பர்கள் மூலம் அந்த செய்தி என்னை வந்தடைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.