பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தொடர்பான 9 ஆயிரம் பக்க ஆவணங்களை மாட்டுவண்டியில் ஏற்றி சென்ற ஆர்டிஐ ஆர்வலர்

போபால்,

மத்தியபிரதேச சிவபுரி மாவட்டம் பைடர் பகுதியை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் மகான் தகட். இவர் பைடர் நகராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தரும்படி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இது தொடர்பான ஆவணங்களை பெற நகராட்சி நிர்வாகம் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தும்படி தெரிவித்தது. இதையடுத்து, ரூ.25 ஆயிரம் பணத்தை மகான் தகட் நகராட்சிக்கு செலுத்தினார்.

ஆனால், பணம் செலுத்த பின்னரும் கடந்த 2 மாதங்களாக கேட்ட ஆவணங்களை நகராட்சி நிர்வாகம் மகானுக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக, குவாலியரில் உள்ள நகர்ப்புற நிர்வாக துறையில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை தொடர்ந்து ஆவணங்களை வழங்கும்படி பைடர் நகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவையடுத்து, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான 9 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை பெற ஆர்டிஐ ஆர்வலர் மகான் தகட் நேற்று பைடர் நகராட்சி அலுவலத்திற்கு மாட்டுவண்டியில் வந்தார்.

நீண்ட போராட்டத்திற்கு பின் ஆவணங்கள் கிடைத்ததை கொண்டாட எண்ணிய மகான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மேளதாளம் முழங்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அவருக்கு 9 ஆயிரம் பக்க ஆவணங்களை அதிகாரிகள் வழங்கினர். மகான் தகட்டின் நண்பர்கள் 4 பேர் ஆவணங்களின் மொத்த பக்கங்களையும் எண்ணி தாங்கள் வந்த மாட்டுவண்டியில் ஏற்றினர்.

ஆவணங்களை பெற்றுக்கொண்ட ஆர்டிஐ ஆர்வலர் மகான் தகட் மாட்டுவண்டியில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.