புதுடெல்லி: புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ரூ.15,000 என்ற வரம்பு தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் எவ்வளவு அடிப்படை ஊதியமோ அதை கணக்கிட்டு ஓய்வூதியத்தை நிர்ணயிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) புதிய விதிமுறையை கொண்டு வந்தது.
கடைசி 12 மாத ஊதியத்தின் சராசரியை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்பட்ட நிலையில் புதிய விதிமுறையில் கடைசி 60 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஊதிய வரம்புக்கு அதிகமாக சம்பளம் பெறுவோர் கூடுதலாக 1.16 சதவீத பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திருத்தங்களை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இபிஎப்ஓ புதிதாக கொண்டு வந்த ஓய்வூதிய திட்டம் செல்லாது என்று கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான், டெல்லி உயர் நீதிமன்றங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தன. இந்த தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இபிஎப்ஓ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு, இபிஎப்ஓ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புதியஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை அமல் செய்தால் இபிஎப்ஓ அமைப்புக்கு பெரும் நிதி சுமை ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. பின்னர் 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதம், விவாதங்கள் கடந்தஆகஸ்ட் 11-ம் தேதியுடன் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
‘கேரள உயர் நீதிமன்றத்தின்தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.ஊழியர்கள் ஓய்வூதிய (திருத்த) திட்டம் 2014’, சட்டப்படி செல்லும். புதிய திட்டத்தில் இணையாமல் கடந்த 2014 செப். 1-ம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இனிமேல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியாது. புதிய திட்டத்தில் இணைந்து 2014 செப். 1-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.
தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். ரூ.15,000 வரம்புக்கு அதிகமாக ஊதியம் பெறும்ஊழியர்கள் கூடுதலாக 1.16 சதவீதபங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என்ற திருத்தம் செல்லாது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.