சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
இமாச்சப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை (நவ.5) சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது. இதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் தானி ராம் சண்டில் கூறும்போது, “கடந்த தேர்தலில் இமாச்சலப் பிரதேச மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். ஐந்து ஆண்டுகள் கழித்து தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக வருத்தப்படுகின்றனர். மக்களின் வாழ்க்கையை பாஜக சிரமத்திற்குள்ளாக்கி உள்ளது. நாங்கள் அளித்திருப்பது வெறும் வாக்குறுதிகள் மட்டும் இல்லை. இமாச்சலப் பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆவணம். காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும். எங்களுக்கு தேவை, மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் மட்டுமே” என்றார். காங்கிரஸ் வாக்குறுதிகளில் சில:
- பழைய ஓய்வுதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
- 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
- பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மாதந்திர உதவித்தொகை
- இமாச்சலப் பிரதேசத்தில் 300 யூனிட்கள் இலவச மின்சாரம்
- இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்க ரூ.680 கோடி ஸ்டார்ட்அப் நிதி
- இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 4 ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
- நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இலவச மருத்துவம்.
- மாட்டு சாணம் கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படும்.