மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருவேலி ஊராட்சியில் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த என்.எஸ்எஸ். மாணவர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் நாட்டு நலப்பணி செய்து வருகின்றனர். இதற்கு பெருவேலி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கங்காதரன் தலைமை தாங்கினார். இந்து மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் ஆசிரியர் மதிமோகன் முன்னிலை வகித்தார்.
7 நாட்களுக்கு அந்த ஊராட்சியில் தங்கியிருந்து மாணவர்கள் அங்குள்ள நடுநிலை பள்ளி வளாகம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட வளாகம், தர்மராஜா கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, முருகர் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு மற்றும் வளாகம், ஊராட்சி சுடுகாடு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுதல், தேவையற்ற செடி, கொடிகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மற்றும் அரசு பள்ளி நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு பேரூராட்சி 13வது வார்டான ராதா நகரில் நேற்று அப்பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ் மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் கபிலா சிரஞ்சீவி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மணிமேகலை, நாட்டு நலப்பணி திட்ட முகாமை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 7 நாட்களுக்கு பேரூராட்சி பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை, சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.ஜெ.செந்தில்குமார், குணசேகர், விஜயிலு, பானு ஜெகதீஷ், புவனா மோகன்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் சந்திரபாபு உட்பட பலர் பங்கேற்று, மாணவர்களின் தூய்மை, சுகாதார பணிகளில் வழிநடத்தி வருகின்றனர்.