மதுரை: மகளிர் கல்லூரியில் மதுபோதையில் இளைஞர்கள் அராஜகம் – அதிர்ச்சி வீடியோ மூலம் காவல்துறை நடவடிக்கை

மதுரையில் உள்ள இரண்டு மகளிர் கல்லூரிகளில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் செய்த வன்முறை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்தியன்று மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் வந்திருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

தனியார் மகளிர் கல்லூரி வாசல் முன் கும்பல்

அதையும் மீறி நரிமேடு பகுதியில் இளைஞர் கூட்டம் ஒன்று இரண்டு சக்கர வாகனத்தில் சத்தமிட்டபடி ரைடு வந்தனர். அப்படியே அருகிலுள்ள தனியார் மகளிர் கல்லூரிக்குள் கூச்சலிட்டபடி நுழைந்தனர். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுதி மாணவிகள் கல்லூரி வாசலிலும், வளாகத்திலும் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அத்துமீறு உள்ளே நுழைந்த அந்த கும்பல் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, மாணவிகளும் அலறி கொண்டு ஓடியுள்ளனர். அந்த கும்பலை தடுத்து நிறுத்திய செக்யூரிட்டியையும் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் செய்தால், மாணவிகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்று கல்லூரி நிர்வாகம் ஆலோசித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களே இந்த அட்ராசிட்டி வீடியோவை சமூக ஊடகத்தில் பெருமையாக வெளியிட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்தது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் மாநகர காவல்துறை ஆணையர் கவனத்துக்கு சென்றதும் , இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அலறி ஓடும் மாணவிகள்

அதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று சமூக ஊடகத்தில் வந்த வீடியோவையும், அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மதுரை புறநகர் பகுதி கல்லூரி மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் போலீஸ் சிலரைத் தேடி வருகிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அதிலிருந்து மீள்வதற்குள், கடந்த 3-ம் தேதி நடந்த மற்றொரு சம்பவம் மேலும் பீதியை ஏற்படுத்தியது.

கோரிப்பாளையம் அருகேயுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைந்துள்ள சாலையில் மருத்துவமனையிலிருந்து கிளம்பிய அமரர் ஊர்தி சென்று கொண்டிருந்தது. அதன் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஆடிக்கொண்டும், கோஷமிட்டபடி இரண்டு சக்கர வாகனத்தில் ரேஸ் செய்தும், விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டும் மக்கள் அச்சப்படும் வகையில் சென்று கொண்டிருந்தனர்.

தனியார் மகளிர் கல்லூரிக்குள் நுழையும் கும்பல்

அந்த நேரம் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மகளை அழைத்து செல்ல வந்தவர், இரண்டு சக்கர வாகனத்தில் சத்தமிட்டு செல்பவர்களை பார்த்து “ஏம்பா இப்படி பண்றீங்க” என்று தன்மையாக கேட்டிருக்கிறார்.

உடனே இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்த அந்த இளைஞர் கும்பல் அவர் மகள் கண் முன்பே ஹெல்மெட்டை வைத்து சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். அது மட்டுமின்றி, கல்லூரிக்குள் அவர்கள் நுழைய முயற்சித்ததால் மாணவிகள் அலறி ஓடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து வாசலை செக்யூரிட்டி மூடியிருக்கிறார். அதன் பின்பு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாரில் செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறது.

தாக்கப்படும் மாணவியின் தந்தை

மேலும் மற்றவர்களை தேடி வருகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி, மக்களை பதற்றமடைய வைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.