சென்னை: சென்னையில் மழையால் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு நேற்று தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் தெருவில் வசித்து வந்த சாந்தி என்பவர், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். அதேபோல, பெரம்பூர் பக்தவத்சலம் காலனியை சேர்ந்த சி.தேவேந்திரன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு ஆகியோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, 41-வது வார்டு எழில் நகர் பக்கிங்ஹாம் கால்வாயை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 47-வது வார்டு, அம்பேத்கர் நகர் கால்வாயில் தடுப்பு வேலிகள் அமைப்பது தொடர்பாகவும், 40-வது வார்டு, இளைய தெருவில் மழைநீர் தங்குதடையின்றி வெளியேற மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், 60-வது வார்டு என்ஆர்டிபாலம் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளின்போது மேயர் ஆர்.பிரியா, வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜான் எபினேசர், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்த ஜோதி, நிலைக்குழு தலைவர்கள் இளைய அருணா (நகரமைப்பு), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு மற்றும் நிதி), மாநகராட்சி துணை ஆணையர்கள் டி.சினேகா (கல்வி), எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.