புதுடெல்லி: டெல்லியில் 2 லட்சம் போலி கட்டிட தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடியை ஆம் ஆத்மி அரசு சுருட்டி வருகிறது என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் 2 லட்சம் போலி கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, இந்தியாவின் மிகப்பெரிய ஊழல். கட்டுமான தொழிலாளர்களுக்காக பணியாற்றும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பினாமிகள் மூலமாக பதிவு செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக டெல்லி அரசு ரூ.3000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை சுருட்டப்படுகிறது. 65 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் ஒரே செல்போன் எண்ணையும், 15,750 தொழிலாளர்கள் ஒரே குடியிருப்பு முகவரியையும், 4370 பேர் ஒரே நிரந்தர முகவரியையும் கொண்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது,’ என தெரிவித்தார்.