ரூ. 300 டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சி நடத்தவில்லை; பெண் நடன கலைஞர் மீது மோசடி வழக்குப்பதிவு

லக்னோ,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி. இவர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

இதனிடையே, 2018ம் ஆண்டு ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தலா 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுபார்த்தபோது நடன நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக வசூலிக்கப்பட்ட தலா ரூ. 300 பணத்தை டிக்கெட் வாங்கியவர்கள் யாருக்கும் நிகழ்ச்சி நிர்வாகம் திரும்பி கொடுக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரொஸ் கான், பணம் திரும்ப்பி தராததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உள்பட 4 பேர் மீது போலீசில் பண மோசடி புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு லக்னோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடன நிகழ்ச்சி நடத்துவதாக கூறி பணம் வசூல் செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்தாமல் மோசடி செய்ததாக பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உள்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிபதி உறுதி செய்தார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள பணமோசடி வழக்கு பிரிவு 420 மற்றும் பிரிவு 406 ஆகியவற்றையும் நீதிபதி உறுதி செய்தார்.

இதனை தொடர்ந்து பண மோசடி வழக்கில் பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உள்பட 4 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.