சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வரும் 15-ம் தேதியே கடைசி நாள் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் அடுத்த மாதம் 15-ம் (டிசம்பர்) தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.