ஷியாம் சரண் நேகியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார்.

இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார். அன்று முதல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஷியாம் சரண் நேகி தவறாமல் வாக்களித்து வந்தார். இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு கடந்த 2ஆம் தேதி தபால் வாக்கு மூலம் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இது அவர் வாக்களித்த 34ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும்.

இந்த நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகியின் இறுதி சடங்கில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கலந்து கொள்ளவுள்ளார். ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக, லட்சக்கணக்கான இந்தியர்களை வாக்களிக்க தூண்டியவரும், ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்டவருமான ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்திருந்தது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.