ஹிமாச்சல், குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி..! – கருத்துக்கணிப்பில் தகவல்!

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வட மாநிலங்களில் பிரபலமான இந்தியா டிவி மாட்ரிஷ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. அதில், “குஜராத் மாநிலத்தில் உள்ள மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 119 தொகுதிகளை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். காங்கிரஸ் 59 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கடந்த 2017 ஆம் ஆண்டில் பாஜக99 தொகுதிகளையும், காங்கிரஸ் 81 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது.

“இந்த தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறையை விட 22 தொகுதிகளை இழக்கிறது. பாஜக 51.3 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 37.2 சதவீத ஓட்டுகளையும், ஆம் ஆத்மி 7.2 சதவீத ஓட்டுகளையும் பெறும். கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் நிர்வாகம் நன்றாக இருப்பதாக 31 சதவீதம் பேர்; 38 சதவீதம் பேர் சுமாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்று 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல், 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் காங்கிரஸ் 25 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.