இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி
காங்கிரஸ்
இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்பதை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், இளைஞர்களுக்கு ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வேலை வாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500, இலவச மின்சாரம் 300 யூனிட், மாட்டுச் சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
விவசாயிகளுடன் கலந்தாலோசித்து பழங்களின் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் இளைஞர்களுக்கு ரூ.68 கோடி தொடக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு ஆங்கில வழிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளரை முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் AK… யார் இந்த இசுதான் கத்வி!
மேலும், கிராமங்களில் நடமாடும் கிளினிக்குகள் மூலம் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்து தினமும் 10 லிட்டர் பாலை அரசே கொள்முதல் செய்யும் என்றும் கூறியுள்ளது.
அந்த வரிசையில், சோலன் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும். கொரோனாவால் மூடப்பட்ட தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் சிறப்பாக இமாச்சலப் பிரதேசத்தின் 80% இளைஞர்களுக்கு மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் கொள்கை திறம்பட செயல்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.