இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிபோவது உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த சூட்டோடு அமர்ந்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவனை, அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தேன். தகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே…
“கோவை குண்டு வெடிப்புச் சம்பவம், 1998-ல் நிகழ்ந்த கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?”
“கோவைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் மைய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். எனினும், இந்தச் சம்பவம் பா.ஜ.க., சங் பரிவார அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்கும், அவர்கள் விரும்புகிற சமூகப் பதற்றத்தை உருவாக்குவதற்கும் முயல்கிறார்கள். எனவேதான், மீண்டும் 1998 என்பது போன்ற பேச்சுகள் வருகின்றன. ஆனால், சூழல் அப்படி இல்லை என்பதை மக்களே உணர்ந்திருக்கிறார்கள்.”
“இந்தச் சம்பவம் எப்படி பா.ஜ.க-வுக்கு வாய்ப்பாக இருக்கும்?”
“இந்தியாவில் இது போன்ற பல குண்டு வெடிப்புகள் நடந்திருக்கின்றன. அந்தச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு தொடர்பிருக்கிறது என்பது கடந்த கால வரலாறு. மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒரு பெண்மணி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அவர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ்-காரர். மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்துவதற்கு இது போன்ற திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்கெனவே நடத்தி இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என்பது உண்மை.”
“ஆனால், அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும், வழக்குகளும் இல்லை என்று அவர்கள் தரப்பில் சொல்கிறார்களே”
“பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் என்றைக்கு உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.18 சம்பவங்களில் வழக்குகள் இருக்கின்றன. ஓய்வு பெற்ற நீதியரசரே வெளிப்படையாக பேசி இருக்கிறார். காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான். ஆனால் இந்து மகா சபையில் கோட்சே இருந்தார் என்கிறார்கள். அவருடைய உடன் பிறந்த அண்ணன் ` அவர் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் அறிவிலியாகத்தான் இருக்க முடியும்’ என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். அதோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் செய்தது என்று சர்தார் வல்லபாய் பட்டேலே அந்த இயக்கத்திற்கு தடை விதித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மிக ஆபத்தான பாசிச இயக்கம். அது வளர்வது நாட்டுக்கு நல்லதில்லை என்று பட்டேல் அப்போதே சொல்லி இருக்கிறார். எனவே ஆர்.எஸ்.எஸ் இயக்கம் திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை ஆங்காங்கே நடத்தியிருக்கின்றது என்பது கடந்த கால வரலாறு. கோவையில் அவர்கள்தான்செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு.”
“கோவைச் சம்பவத்தில் மாநில அரசின் உளவுத்துறை கோட்டைவிட்டுவிட்டது என்கிற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறதே?”
“இதில் கோட்டைவிட்டதா, கோட்டை விடவில்லையா என்கிற ஆய்வுக்கு செல்ல நான் புலனாய்வு அதிகாரி இல்லை. இதை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதற்கான வாய்ப்பை பார்க்கிறது. பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பியூரோகரஸி சிஸ்டம் சரியா இருக்குமென்று சொல்ல முடியாது. அவர்களுக்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதை பின்பற்றிதான் எதையும் செய்ய முடியும். இதையெல்லாம் தாண்டி பா.ஜ.க-வை பொறுத்தவரை, பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் எந்த நேரமும் அவர்கள் மீது குற்றம்சுமத்துவது, கலங்கத்தை ஏற்படுத்துவது, மக்களிடம் வதந்திகளை பரப்புவது போன்றவற்றை அரசியல் செயல் திட்டங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.”
“தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் மதுவிற்பனை, மதுவால் ஏற்படும் சமூக சிக்கல்கள் குறித்து வி.சி.க-வின் நிலைபாடு?”
“இது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. மதுவிலக்கு என்பது தேசிய கொள்கையாக இருந்து முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அதை இந்திய அரசே அறிவிக்க வேண்டும். காவல்துறைக்கு ஒரே சீருடை கொண்டு வர வேண்டும் என்று இந்திய பார்வை இருக்கும்போது, மது விலக்கையும் நடைமுறைப்படுத்துகிறோம் என்று ஏன் பா.ஜ.க சொல்லக் கூடாது. மாநில அரசை கேட்க கூடாது என்று சொல்லவில்லை. தமிழ்நாடு அரசும் கட்டாயமாக மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் வி.சி.க-வின் கருத்து. இளம் வயதிலேயே பல இளைஞர்கள் மதுவால் சீரழிகிறார்கள். இன்னும் சொல்ல போனால் கிராமப்புறங்களில் சாராயத்தோடு கஞ்சாவும் பரவி கொண்டிருக்கிறது. இது ஆபத்தான சூழல்.”
“ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கண்டு வி.சி.க-வுக்கு பயமா… ஏன் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறீர்கள்?”
“பா.ஜ.க பேரணி நடத்தட்டும். பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு அரசியல் முகம்தான். ஆனாலும், அதற்கு ஒரு முகமூடியாவது இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-க்கு முகமூடியே கிடையாது. மிகவும் வெளிப்படையாக செயல்படக் கூடிய ஒரு பாசிச அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்துவதை ஓர் ஆபத்தான அறிகுறியாக பார்க்கிறோம். அது கூடாது என்பது எங்கள் கருத்து. தடுக்க முடியாத சூழல் வரும்போது அன்றைய தேதியில் ஒரு லட்சம் மனுஸ்மிருதி தமிழ்நாடு முழுவதும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். அதை ஓர் அரசியல் நடவடிக்கையாக நாங்கள் மேற்கொள்கிறோம்.”
“ஆனால், `இத்தனை ஆண்டுகள் நாங்கள் ஊர்வலம் போய் கொண்டுத்தானே இருக்கிறோம். ஏன் இப்போது மட்டும் எதிர்ப்பு’ என்று அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கிறார்களே?”
“அவர்கள் ஷாகா பயிற்சி, அதை ஒட்டி நடக்கும் பேரணி, பள்ளிக்கூடங்களில் நடக்கும் பேரணிகளை சொல்லியிருக்கலாம். பொதுவாக தமிழ்நாட்டில் பேரணி நடத்த சில பகுதிகள் அனுமதிக்கப்படுகின்றன. சென்னை என்று எடுத்து கொண்டால் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து, சுந்தர ராவ் சிலை வரைதான் போகணும். ஆனால், அவர்கள் சென்னைக்குள்ளயே கொளத்தூர் தேர்வு செய்திருக்கிறார்கள். அங்கு ரொம்ப இன்டீரியராக நான்கைந்து வீதிகள் சுற்றி வருவது போல் திட்டமிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் காவல்துறை அனுமதிக்கப்படாத பகுதிகள். அவர்கள் தெளிவாக திட்டமிட்டுத்தான் செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை முதன்முறை இது. இதை ஒரு கலாசார நடவடிக்கையாக இல்லாமல் அரசியல் நடவடிக்கையாக எடுக்கிறார்கள். அதனால் இது நல்லதல்ல என்பது விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து.”
இந்தக் கேள்வி பதில்களோடு…
“சமூகப் பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறது என்கிறீர்களா?”
“ ‘இஸ்லாமிய சமூகம் வேறு, இஸ்லாம் தீவிரவாதிகள் என்பவர்கள் வேறு என்பதை தி.மு.க கூட்டணிக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று பா.ஜ.க வலியுறுத்துகிறதே?”
“ ‘திருமாவளவன் தொடர்ந்து இஸ்லாமியர்களை ஆதரிக்க, அவர்கள் தரப்பிலிருந்து பெறும் நிதிதான் காரணம்’ என்கிற குற்றச்சாட்டு குறித்து…”
“கோவைச் சம்பவம் குறித்த விசாரணையை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்திருப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?”
“நீட் தேர்வு குறித்து கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தவர் நீங்கள்… ‘நீட்’ ஒழிப்பில் தி.மு.க அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகின்றனவா?”
“ `தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு தி.மு.க மறைமுகமாக உதவுகிறது’ என்கிற விமர்சனம் பற்றி…”
“தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க எல்லாம் ஓரணியில் திரளும் என்கிறீர்களா… அப்படி ஓர் இணைப்பு சாத்தியமா?”
போன்ற கேள்விகளுக்கு 9.11.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு விரிவான பதில் அளித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.