புதுடில்லி: சீன உளவு கப்பலின் கண்காணிப்பு எதிரொலியாக, அடுத்த வாரம் நடக்கவிருந்த ஏவுகணை சோதனையை ஒத்திவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவிலிருந்து, வரும் 10 – 11ம் தேதிகளில் நீண்ட துாரம் சென்று தாக்கக்கூடிய அக்னி ஏவுகணை சோதனையை நடத்தப் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊடுருவல்
இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து சென்று, 2,200 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. இதையடுத்து, இந்த தொலைவுக்குள் உள்ள வான் பகுதிக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக வங்கக் கடல் பகுதியில் இந்த தேதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவுக்கு சொந்தமான ‘யுவான் வாங் 6’ என்ற உளவு கப்பல், இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களுக்கு பாலி கடற்பகுதியில் அந்த கப்பல் முகாமிடப் போவதாகவும் தகவல் வெளியானது.
சர்வதேச கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும், ‘மரைன் டிராபிக்’ என்ற நிறுவனம், சீன உளவு கப்பலின் வருகையை உறுதி செய்தது. இந்த உளவு கப்பலில் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
ஏவுகணையின் செயல் திறன், அதன் தொழில்நுட்பம், துல்லியம், வேகம் ஆகியவற்றை சீன உளவு கப்பலால் எளிதாக கண்காணிக்க முடியும்.
இந்த கப்பல், 22 ஆயிரம் டன் எடையுடையது. இதில், 400 வீரர்கள் உள்ளனர். ரேடார், சென்சார் போன்ற அதி நவீன கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதையடுத்து, ஏவுகணை சோதனையை ஒத்திவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் இயல்பு நிலை திரும்பிய பின், ஏவுகணை சோதனை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடற்படை உஷார்
சீன உளவு கப்பலின் வருகையை அடுத்து, இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள போர்க்கப்பல்கள் வாயிலாக தீவிர ரோந்து பணி நடக்கிறது. தற்போது சீன உளவு கப்பல், இந்திய கடற்பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் நகர்வை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆகஸ்டில் சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பல், மற்றொரு அண்டை நாடான இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தது.
இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவும், சீன உளவு கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் முகாமிட்டிருந்த இந்தக் கப்பல், பின்னர் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்