வாஷிங்டன்,
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் ‘டுவிட்டர் புளூ’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
மாதம் ரூ.409 கட்டணத்துடன் ‘டுவிட்டர் புளூ’ வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், ‘தீம்களை’ மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் ‘டுவிட்டர் புளூ’வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.
சிறப்பு அம்சங்களை கொண்ட ‘டுவிட்டர் புளூ’ வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ‘டுவிட்டர் புளூ’ வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர் இன்று டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார்.
இந்திய பயனாளரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், ‘ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தார்.