ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் நங்கூரம் அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதில் வின்னரசன், கென்னடி, கிருபை, அந்தோணிராஜ், முருகன், சவரிமுத்து, ஜெராண்டோ உள்ளிட்ட 10 பேரின் படகுகள் கடும் சேதமடைந்தன.
மேலும் 20 படகுகளில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. 5 படகுகள் நங்கூரம் கழன்று கரை ஒதுங்கின. இந்த படகுகளை சூறைக்காற்று நின்றதும் இரவோடு இரவாக மீனவர்கள் கடலுக்குள் இழுத்துச் சென்று நங்கூரமிட்டு நிறுத்தினர்.
விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறும்போது, ஒரு படகை மராமத்து செய்ய ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும். சேதமடைந்த படகுகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என்றார்.