புதுடெல்லி: தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜவிடமும், 2 தொகுதிகள் காங்கிரசிடமும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிடம் தலா ஒரு தொகுதியும் இருந்தன.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 7 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சமீபத்தில் தேசிய கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை வீழ்த்த பாஜ சபதம் ஏற்றுள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் டிஆர்எஸ், பாஜ இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவின் போதே டிஆர்எஸ், பாஜ தொண்டர்கள் மோதிக் கொண்ட நிலையில் வாக்குஎண்ணிக்கை இன்று நடப்பதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல பீகாரில் பாஜவை கழற்றி விட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், எதிர்க்கட்சியாக இருந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைத்தது. அதன் பின் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இதனால், இக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவு என்பதால் இங்கு 2 தொகுதிகளின் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.