7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை

புதுடெல்லி,

நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அவர் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் 22,756 ஓட்டுகள் பெற்று உள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர் சோனம் தேவி 15,032 ஓட்டுகளுடன் அவரை பின்தொடருகிறார்.

மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் ருதுஜா லத்கே, 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 11,361 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.