7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க.-4, ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ். தலா 1 இடத்தில் முன்னிலை

புதுடெல்லி,

நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த தேர்தலில் அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் ருதுஜா லத்கே 24,955 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மறைந்த ரமேஷ் லத்கேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கேட்டு கொண்டதற்கு ஏற்ப இந்த தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்த தொகுதியில் அதிக அளவாக 4,712 நோட்டா வாக்குகள் விழுந்துள்ளன.

தெலுங்கானா சட்டசபைக்கு உட்பட்ட முனோகோடே தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள கூசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து இருவருக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரபாகர் ரெட்டி 26,443 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை தொடர்ந்து, பா.ஜ.க. வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 25,729 வாக்குகளுடன் 2-வது இடத்தில் பின்தொடர்ந்து வருகிறார்.

இதன்படி, ராஷ்டீரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலா 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றன. கோபால்கஞ்ச், ஆதம்பூர், தாம்நகர், கோலகோகர்நாத் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.