அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி… ஓபிஎஸ், பாஜகவுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்!

‘அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். அவர்களை கட்சியில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதுமட்டுமின்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமரும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்’

அதிமுகவின் 51வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நேற்று நடைபெற்ற பொதுக்கட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பேச்சுதான்.

அதிமுக ஒற்றைத் தலைமை யுத்தத்தில் கட்சிரீதியாக வெற்றிப் பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த நாள் முதல் இபிஎஸ் இதைதானே சொல்லிக் கொண்டிருக்கிறார்… இதில் புதிதாக அர்த்தம் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ என்ன இருக்கிறது என்று கேட்டால், நிறைய இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விவரமறிந்தவர்கள்.

ஓபிஎஸ். 2024 தேர்தல் தலைமை ஆகியவை குறி்த்த இபிஎஸ்சின் நேற்றைய பேச்சை, கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு முன், கூட்டத்துக்கு பின் என்று இருவிதமாக பார்க்கலாம். அந்த கூட்டத்துக்கு முன்பும் ஓபிஎஸ்ஸு்க்கு இனி அதிமுவில் இடமில்லை என்றுதான் பேசி வந்தார்.

ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘அண்ணே… ஓபிஎஸ்ஸை நாம் இப்படி ஒரேஅடியாய் ஓரங்கட்டுவதை பாஜக தலைமை ரசிப்பதாக தெரியவில்லை… அதனால நீங்க கொஞ்சம் கீழே இறங்கிதான் வாங்களேன்… இல்லைன்னா சிவசேனாவுக்கு நேர்ந்ததை போல இரட்டை இலையை முடக்கிட போறாங்க’ என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளை இபிஎஸ்ஸுக்கு அட்வைஸ் செய்ததாக கூறப்பட்டது.

அப்படி தம்மை அட்வைஸ் செய்தவர்களிடம், அப்படி சின்னத்தை அவர்கள் முடக்கினால் முடக்கிவிட்டு போகட்டும்… ஏனென்றால் நமக்கு 2024 எம்பி தேர்தல் முக்கியமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். எனவே இரட்டை இலை முடக்கப்பட்டால் அதனால் நமக்கு பெரிய இழப்பில்லை. ஆனால் பாஜகவுக்கு தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னமும் செல்வாக்கு வந்துவிடவில்லை. எனவே 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவின் சொல்படிதான் பாஜக கேட்டாக வேண்டும். அப்படி இருக்கும்போது சின்னம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடக்கப்பட்டுவிடாது.

அதேபோல கொடநாடு கொலை, கொள்ளை வழக்காக இருந்தாலும் சரி… நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடைபெற்றதாக நடத்தப்படும் ரெய்டாக இருந்தாலும் சரி… எதுவானாலும் தைரியமாக இருங்கள்…சட்டரீதியாக சமாளித்து கொள்ளலாம் என்று மா.செ.க்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இபிஎஸ் இப்படி கட் அன்ட் ரேட்டாக பேசியதாக தெரிகிறது. அவரது இந்த பேச்சில் மூத்த நிர்வாகிகளுக்கு வந்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே, நேற்று நாமக்கல்லில் இபிஎஸ் பேச்சு பார்க்கப்படுகிறது.

இப்படி ஓபிஎஸ், பாஜகவை கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க இபிஎஸ் தயாராகிவிட்டதால், அதிமுவில் ஓபிஎஸ்சுக்கு இனி அனேகமாக இடமில்லை என்றே எண்ணமே அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. அத்துடன் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்காமல்விட்டால், அவரால் தென்மாவட்டங்களில் ஓட்டுகள் பிரியும்; அதனால் கூட்டணிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று பாஜகலின் கவலை போக்க, அமமுகவை அதிமுகவுடன் இணைக்கும் பணியையும்

முன்னெடுத்துள்ளதாகவே தெரிகிறது.

எனவே,. ஓபிஎஸ் விஷயத்தில் பாஜகவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இபிஎஸ் விடாப்பிடியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் அவர் எதற்கும் தயாராக இருக்கிறார் என்றே அரசியல் அரங்கில் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த புரிதலுக்கு பிறகு ஓபிஎஸ்ஸும், பாஜக தலைமையும் என்ன செய்யப் போகின்றனர் என்பதுதான் தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.