அரசு பள்ளி மாணவர்கள் 87 பேருக்கு சென்னை ஐஐடியில் இடம்! அன்பில் மகேஸ்

சென்னை: அரசு பள்ளி மாணவர் 87 பேருக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டார். ,இதுவரை தமிழக தொழிற்பயிற்சி நிலையங்களில் 24,977 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில், அரசு பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கல்விபயிலும் வகையில்  ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி., – எம்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் தேர்வு நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேர்வில், 39 மாணவியர் உட்பட 87 பேர், பி.எஸ்., ‘டேட்டா சயின்ஸ்’ நான்கு ஆண்டு படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான சேர்க்கை கடிதங்களை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி , உலகின் பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் தான் இருக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இங்குள்ள பலரும், உலக நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருப்பர். அதேபோல், உலகின் பெரிய நிறுவனங்களும் தமிழகத்தில் உருவாகும். அந்த வகையில், அனைத்து மாணவர்களையும் தயார்படுத்தி வருகிறோம். அனைவருக்கும் ஐ.ஐ.டி., – எம் திட்டத்தில், 87 அரசு பள்ளி மாணவர்கள் சேருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, 800 ஆகவும், 8000 ஆகவும் அதிகரிக்க வேண்டும். இதை நீங்கள் மற்ற மாணவர்களுக்கும் தெரிவித்து, உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும்,  ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ குறித்து முதல் கட்டமாக, சோதனை முயற்சியாக பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அதன்பின், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான, 1 லட்சம் மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்க உள்ளோம். அடுத்த கட்டமாக, பி.எஸ்., ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ பட்டப் படிப்பை துவங்க உள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில்,  பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி.. – எம்’ திட்ட இயக்குனர் விக்னேஷ் முத்துவிஜயன், ஐ.ஐ.டி., பேராசிரியர் பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.