சின்னத்திரை நடிகராகப் பழக்கப்பட்ட முகம் அருண் குமார் ராஜன். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `கண்ட நாள் முதல்’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை நடிகர் அர்னவ் – திவ்யா பிரச்னை குறித்து அவர் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். மேலும், மறைந்த சின்னத்திரை நடிகையின் குழந்தைகளுக்கு உதவக் கோரி வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.
“அர்னவ் எங்களோட ஃபேமிலி ஃப்ரெண்ட். கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கும் மேல அவரை எனக்குத் தெரியும். இந்த மீடியா இன்டஸ்ட்ரியோட மிகப்பெரிய சாபக்கேடு இது! ஆர்ட்டிஸ்ட் மீடியாத்துறையில் இருக்கிறவங்கன்னா அவங்க மனைவியுடைய சப்போர்ட் ரொம்பவே முக்கியம். அர்ணவ் தப்பு; திவ்யா சரி… அல்லது திவ்யா தப்பு; அர்னவ் சரின்னு நான் சொல்ல வரல. எல்லாமே கடந்து போகக்கூடிய பிரச்னைதான். அவங்க வீட்டுக்குள்ள அதைப் பேசி சரி செய்திருக்கலாம். இன்னைக்கு அர்னவ் ஜெயிலில் இருந்துட்டு வந்திருக்காரு. அவங்க ரெண்டு பேரில் இவங்க தப்புன்னு யாருக்குத் தண்டனை கொடுத்தாலும் அது ரெண்டு பேரையும் நிச்சயம் பாதிக்கும். இத்தனை வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதாக சொன்னாங்க. அப்ப அவங்க காதல் எங்க போச்சு?
நான் எதுக்காக பயந்தேனோ இப்ப அதுதான் நடந்திருக்கு. அர்னவ் ஜெயிலிலிருந்து வந்ததும் நான் போனில் அவர்கிட்ட பேசினேன். அவர் ரொம்ப ஸ்ட்ரெஸாகவும், டிப்ரஷனிலும் இருந்தார். அவர் சிறைக்குள்ளே என்னென்ன விஷயங்கள் அனுபவிச்சார்னு நமக்குத் தெரியாது. ஆனா, அர்னவ் பத்து வருஷத்துக்கு பின்னாடி போயிட்டான். மறுபடி முதலில் இருந்து அவர் உழைப்பை தொடங்கணும். இப்ப மறுபடி அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்களான்னு எனக்குத் தெரியல. ஆனா, எல்லாத்தையும் மீறி அவங்களுடைய காதல் ஜெயிக்கலாம். அவங்க ஒண்ணு சேரணும் என்கிற ஆசையில்தான் நானும் காத்துட்டு இருக்கேன்.
காலம் எல்லாத்தையும் மறக்கச் செய்யும். அவங்களுக்கு நாம கால அவகாசமே கொடுக்காம யார் மேல தப்புன்னு தொடர்ந்து இப்ப பேசிட்டு இருக்கிறது எப்படிச் சரியா இருக்கும்? இதனால அவங்க குழந்தை தான் பாதிக்கப்படப் போகுது. மனஅழுத்தத்தில் அவன் ஏதாவது தப்பான முடிவை எடுத்துட்டான்னா என்ன பண்றது? தப்பான முடிவுக்குள்ள அர்னவ் போயிடக் கூடாதுங்கிறதுக்காக மட்டும்தான் நான் அந்த வீடியோ பதிவிட்டேன்” என்றவரிடம் நடிகை ஹேமா குறித்துக் கேட்டோம்.
“‘அழகி’ என்னுடைய முதல் புராஜக்ட். அந்த சீரியலில் ஹேமா என்னுடன் நடிச்சிருந்தாங்க. அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாம சமீபத்தில் இறந்துட்டாங்க. அவங்களுக்கு 8 வயசு பாப்பா இருக்காங்க. அவங்களுடைய படிப்பு செலவுக்கும், மற்ற செலவுக்கும் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. நான் என் ஃப்ரெண்ட்ஸ் வட்டத்துல பேசி ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் ரெடி பண்ணி கொடுத்தேன். ஆனாலும், அந்தக் குழந்தைக்கு உதவி தேவைப்படுது.
இது மாதிரி சின்னத்திரையை மட்டுமே நம்பி பலர் இருக்காங்க. ஹேமா குடும்பம் இன்னைக்கு கஷ்டப்படுற மாதிரி எந்தக் குடும்பமும் இனி கஷ்டப்படக் கூடாது. நலிவடைந்த கலைஞர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணனும். அவங்களுக்கு ஏதாவது செய்யணும் என்கிற எண்ணம் இருக்கு. ஆனா, என்ன செய்யணும்னுதான் தெரியல. என் சம்பளத்தில் மாச, மாசம் ஒரு தொகையை அந்தக் கலைஞர்களுக்காக கொடுக்கணும்னாலும் நான் தயார். எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் அப்படி முன்வருவாங்களான்னு எனக்குத் தெரியல. ஹேமாவுடைய குழந்தையை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நாளைக்கு என் குழந்தைக்கும் இந்த நிலைமை வரலாம். சின்னத்திரை நடிகர் சங்கமும், தமிழக அரசும் இவங்களுக்காக பென்ஷனோ, ஹெல்த் ஸ்கீமோ ஏதாவது ஒண்ணு செய்து கொடுக்கணும்” என்றவரிடம், ‘பிக் பாஸ்’ பார்க்குறீங்களான்னு கேட்கவும் சிரிக்கிறார்.
“அப்பப்ப பார்க்கிறேன். அந்த வீட்ல இருக்கிற பெரும்பாலானவங்க ரியலாகத்தான் இருக்காங்க. அசிம் கூட `பூவே உனக்காக’ தொடரில் நடிச்சிருக்கேன். அந்த சீரியலில் நடிக்கும்போது செட்ல ஹீரோயினை தகாத வார்த்தை சொல்லி திட்டிட்டார். அந்த செட்ல இருந்த எல்லா பெண் ஆர்ட்டிஸ்ட்களும் அவர் மன்னிப்பு கேட்டாதான் நாங்க நடிப்போம்னு சொல்லிட்டாங்க. அப்ப கூட அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் அந்த சீரியல் தயாரிப்பாளர் பேசினார். ரொம்ப உறுதியா மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு அவங்க சொன்னதால மட்டும்தான் அசிம் மன்னிப்பு கேட்டார். அவருடைய ரியல் முகத்தைதான் அவர் பிக் பாஸ் வீட்ல காட்டிட்டு இருக்காருன்னு சொல்லுவேன். அதே மாதிரி, ஆயிஷாவையும் எனக்குத் தெரியும். அவங்களால அவங்களுடைய கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியாது!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து அருண் குமார் ராஜன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!