சென்னை: “105-வது நவம்பர் புரட்சி தினத்தை கொண்டாடுகிற இந்த நேரத்தில், இந்திய நாட்டிலே பாசிச சக்தியாக இருக்கக் கூடிய ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்துகின்ற மகத்தான கடமையை இந்திய பாட்டாளி வர்க்கம், உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
105-வது நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் இன்று செங்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அமெரிக்காவுக்கு அருகில் இருக்கின்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்கெனவே 11-க்கும் மேற்பட்ட நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சிகள் வந்திருக்கிற சூழ்நிலையில், சமீபத்தில் பிரேசிலில் நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலு மகத்தான வெற்றி பெற்று ஏகாதிபத்திய பிற்போக்கு சக்தி வேட்பாளரை வீழ்த்தி ஆட்சிக்கு வந்துள்ளார். பிரேசில் வெற்றி என்பது உலகில் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், சோஷலிச சக்திகளுக்கு கிடைத்திருக்கிற மகத்தான வெற்றி.
105-வது நவம்பர் புரட்சி தினத்தை கொண்டாடுகிற இந்த நேரத்தில், இந்திய நாட்டிலே பாசிச சக்தியாக இருக்கக்கூடிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துகின்ற மகத்தான கடமையை இந்திய பாட்டாளி வர்க்கம், உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டும்.
இந்தியா ஏதோ முன்னேறிக் கொண்டிருக்கிறது நிர்மலா சீதாராமனும், பிரதமர் மோடியும் என்னதான் பட்டியலிட்டு காட்டினாலும், உலகில் உள்ள 101 நாடுகளில் பட்டினி குறித்த கணக்கெடுப்புக்காக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 107-வது இடத்தில் இந்தியா இடம்பெற்றிருப்பது என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம்” என்று அவர் கூறினார்.