டெல்லி: இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல என வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளார். உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் (3:2) கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இடஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். செல்லாது என தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வழக்கறிஞர் வில்சன்; பொருளாதார அடிப்படையாக இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற வாத்தை முன்வைத்தோம்.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல. உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றனர். உயர் சாதியினரில் மட்டுமல்லாமல் மற்ற சாதியினரிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியியவர்கள் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும் ஏழைகள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 33சதவீதமாக உள்ள உயர் சாதியினருக்கு மட்டுமே 10% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வேலை வாய்ப்பும் கல்வியும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ள சாதியினருக்கு வாய்ப்பு அளிப்பது தான் இடஒதுக்கீட்டின் நோக்கம். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்திவாலா ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு தந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி திமுக தலைவர் முடிவு செய்வார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் வராது இவ்வாறு கூறினார்.