சென்னை, கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (78). வருமானவரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது மனைவி பானுமதி (76). இவர் தடய அறிவியல் துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்த தம்பதி 6 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கீழ் தளத்தில் இருவரும் தனியாக வசித்து வந்தனர். தினசரி இரவு 10.30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டை மூர்த்தி மனைவியுடன் சென்று பூட்டுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மூர்த்தி, பானுமதி இருவரும் கேட்டை பூட்ட சென்றனர்.
அப்போது கேட்டில் கை வைத்தபோது பானுமதி மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி மனைவியை காப்பாற்ற முயன்ற போது மூர்த்தி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் நகர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரும்புத்தூணில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. வயதான தம்பதிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.