சென்னை அடுத்த நுங்கம்பாக்கம் குளக்கரைத் தெருவில் கடந்த 2ம் தேதி ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்த பொது மக்கள் உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்ட்டதோடு, அதில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கத்தியால் குத்த முயன்றுள்ளான். போலீஸார் அவர்களை பிடிக்க முயன்ற போது அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த சம்மவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலிஸாருக்கு போரூர், பாரதியார் தெரு வில் ஒரு வீட்டில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்த மூன்று பேரை போலிஸார் மடக்கிப் பிடித்தனர். அந்த வீட்டைச் சோதனை செய்ததில், ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் பல கத்திகளை போலீஸார் கைப்பற்றினர்.
தினேஷ் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கஞ்சா, வழிப்பறி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. முகமது அஜிம் என்பவர் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. நுங்கம்பாக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தினேஷின் நண்பரான குமாரை ஒரு ரவுடி கும்பல் கொலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் தனசேகர், பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
தன் நண்பனின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தன் கூட்டாளிகளுடன் போரூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி திட்டம் தீட்டியிருக்கிறார் தினேஷ். இதற்காக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபரிடம் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கியுள்ளார். இவருக்கு வெடிகுண்டு சப்ளை செய்த நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதாரண ரவுடிகள் இடம் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.