ஜெயங்கொண்டம்: ஐப்பசி பவுர்ணமியையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரியகோயில் பெருவுடையாருக்கு மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு பவுர்ணமி இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 5ம் தேதி காலை 5 மணியளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகமும் தீபாராதனையும், நேற்று காலை 9 மணிக்கு பிரகன் நாயகி அம்பாளுக்கும், பிரகதீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 21 வகையான மகா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைக்கும் பணி காலை 9 மணிக்கு துவங்கியது. இதைதொடர்ந்து பிரகதீஸ்வரர் சிவலிங்கத்துக்கு அன்னம் அலங்காரம் ெசய்யப்பட்டது. பின்னர் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணியளவில் பிரகதீஸ்வரர் மேல் சாத்தப்பட்ட அன்னத்தின் மீது பலகாரங்கள் செய்து அடுக்கி மலர் அலங்காரம் செய்யப்படும். மாலை 6 மணியளவில் மகாதீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிவலிங்கம் மீது சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மீதி உணவு குளத்தில் உள்ள மீன்களுக்கு போடப்படும். நாளை சந்திர கிரகணத்தையொட்டி காலை 10.30 மணிக்குள் ருத்திரா அபிஷேகமும், சண்டிகேஸ்வர பூஜையும் நடைபெறுகிறது.
இதேபோல் தஞ்சை பெரிய கோயிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் செய்திருந்தனர்.