காய்ச்சலுக்கு போட்ட ஊசியால் 6 வயது சிறுவன் பரிதாப மரணம்.. விருதுநகரில் நிகழ்ந்த துயரம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப் பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். கூலி தொழிலாளியான இவருக்கு யுவஸ்ரீ (10), கவி தேவநாதன் (6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரனின் மனைவி கற்பகவள்ளி தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தனது தாயின் உதவியுடன் மகேஸ்வரன் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவின் போது கவி தேவநாதனுக்கு காய்ச்சல் வந்துள்ளது. எனவே அருகே வசிக்கும் தனியார் மருத்துவமனை மருந்தாளுனரிடம் சிகிச்சை எடுத்துள்ளார். அந்த சமயத்தில் காய்ச்சல் சரியானாலும் மறுநாள் காலை மீண்டும் காய்ச்சல் அடித்ததால் சம்மந்தபுரம் பகுதியில் தனியார் க்ளினிக் வைத்து நடத்தும் அரசு மருத்துவர் பாஸ்கரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
image
அங்கு கவி தேவநாதனுக்கும், யுவஸ்ரீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு வீடு வந்து சேர்ந்ததும், இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்ததோடு, அடுத்த சில நிமிடத்திற்குள் சிறுவன் கவி தேவநாதனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகமாக வியர்த்து போயிருக்கிறது. 
இதனால் பதறிய தந்தை மகேஸ்வரன் மீண்டும் சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவர் பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பாஸ்கரன் கூறியிருக்கிறார். இதனையடுத்து தென்காசி சாலையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு சென்றிருக்கிறார் மகேஸ்வரன். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் கவி தேவநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். 
image
இது குறித்து மகேஸ்வரன் அளித்த தகவலின் பேரில் DSP ப்ரீத்தி உள்ளிட்ட காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீரியமுள்ள மருந்துகளை மருத்துவர் பாஸ்கரன் பரிந்துரை செய்ததால் தன்னுடைய மகன் இறந்திருக்கலாம் என தந்தை மகேஸ்வரன் கண்ணீருடன் சந்தேகம் தெரிவித்தார். மேலும் மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் துறையினர், சிறுவன் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி இருக்கையில், சிறுவன் இறந்த விவகாரம் குறித்து மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் மருத்துவர் முருகவேல், சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் கலு சிவலிங்கம், நகர் நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
image
அதன்படி முதற்கட்டமாக பெண் மருந்தாளரான ஆக்னஸ் கேத்ரின் பல நாளாக மருத்துவர் போன்று ஆங்கில மருந்துகளை மக்களுக்கு பரிந்துரைத்தது கண்டறியப்பட்டது. இறந்த சிறுவன் கவி தேவநாதனுக்கும் அந்த போலி பெண் மருத்துவர்தான் மருந்துகளை கொடுத்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு ஆக்னஸ் கேத்ரினை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல ஆங்கில மருந்துகள், பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத சிரஞ்சிகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.