சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துநாய்க்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி கடந்த ஒருமாதத்திற்கு முன்பு
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமை தாங்கினார். அப்போது ஒருமாதத்தில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.
இதன் காரணமாக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒருமாத கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது. ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதுபற்றி தகவலறிந்த பாமக எம்.எல்.ஏ அருள் பொதுமக்களுடன் புறப்பட்டு சென்றார். டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியர்களின் காலில் விழுந்து, கடையை மூட நடவடிக்கை எடுங்கள் என கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் “மக்களை காப்பாற்றுங்கள்”, ”தயவு செய்து இனி கடையை திறக்க வேண்டாம்”, ”நாளை முதல் கடை திறப்பதை நிறுத்தி வையுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார். அதற்கு டாஸ்மாக் மேலாளரிடம் தகவல் தெரிவிக்கிறோம்.
அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ? அதன்படி நாங்கள் செயல்படுவோம் என்று ஊழியர்கள் பதிலளித்தனர். பாமக எம்.எல்.ஏ அருள் டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி எம்.எல்.ஏ அருளிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். எப்படியாவது கடையை மூட நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.