கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ. சைக்கிளில் பயணித்து கேரள பெண்ணை மணம் முடித்த வாலிபர்

தொண்டாமுத்தூர் :  கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா (28). பொறியாளர். இவர், குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும், ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அவரது பெற்றோர் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் சிவசூர்யாவுக்கு நிச்சயம் செய்தனர். தொடர்ந்து இருவீட்டு பெற்றோரும் பேசி, திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்த முடிவு செய்து  ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த திருமணத்திற்கு சிவசூர்யா, காரிலோ அல்லது வேனிலோ செல்லவில்லை. மாறாக கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே சென்றார்.

இதற்காக அவர் நேற்று முன்தினம் அதிகாலை 5.30மணிக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்களும் சென்றனர்.கோவையில் இருந்து கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைந்தார். கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்தார். நேற்று காலை 10 மணிக்கு குருவாயூர் கோவிலில் வைத்து இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சிவசூர்யா கூறியதாவது: எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.இதனால் உடல் ஆரோக்கியத்தில் பொது மக்கள் அனைவரும் அக்கறை எடுத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு கூட ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1,902 கி.மீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.எனது திருமணத்தன்றும் நான் காரில் செல்வதற்கு பதிலாக சைக்கிளிலேயே செல்ல திட்டமிட்டேன்.அதன்படியே நேற்று  சைக்கிளில் கேரளாவுக்கு பயணித்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.