சிவசேனா வேட்பாளர் வெற்றி: மும்பை இடைத்தேர்தலில் ஹைலைட் ஆன `நோட்டா’ – என்ன காரணம்?

மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 3 நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் அனைவரும் எதிர்பார்த்தது போல் சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கே 66 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் பா.ஜ.க முதலில் வேட்பாளரை அறிவித்துவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டது. ருதுஜாவின் கணவர் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் மரணமடைந்ததை தொடர்ந்து சிவசேனா ருதுஜாவை இடைத்தேர்தலில் நிறுத்தியது. ருதுஜாவை தங்களது அணி சார்பாக போட்டியிட வைக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப்பிரச்னை நீதிமன்றம் வரை சென்றதால் வேறு வழியில்லாமல் இந்ததொகுதியில் போட்டியிடுவதில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பாஜகவும் ஒதுங்கிக்கொண்டது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் சிவசேனாவினர்

இந்ததேர்தலில் தோல்வி அடைந்தால் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் பின்னடைவாக அமையும் என்று பா.ஜ.க ஒதுங்கியது. ஆனால் ஒதுங்கிக்கொண்டாலும் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது மக்களுக்கு பணம் கொடுத்து நோட்டாவிற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

உத்தவ் தாக்கரேயின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக இந்த தேர்தலில் நோட்டாவிற்கு அதிக பட்ச வாக்குகள் கிடைத்திருக்கிறது. நோட்டாவிற்கு 12 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இந்த அளவிற்கு நோட்டாவிற்கு தேசிய அளவில் எங்கும் வாக்கு கிடைத்தது கிடையாது. நோட்டா இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஆனாலும் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் முதல் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்று இருப்பது அந்த அணிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதுவும் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உத்தவ் தாக்கரே அணியினர் மிகவும் சிரமப்பட்டனர்.

நோட்டா

இது குறித்து அரசியல் நிபுணர் சந்தோஷ் பிரதான் செய்தியாளர்களிடம், “இந்த தேர்தல் வெற்றி சிவசேனாவுக்கு நிச்சயம் தொண்டர்களிடம் ஒரு வித உற்சாகத்தை கொடுக்கும். பா.ஜ.க-வினர் நோட்டாவிற்கு வாக்களித்த போதிலும் சிவசேனா வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். இந்த வெற்றி பா.ஜ.க-விற்கு நிச்சயம் உதவியாகத்தான் இருக்கும். நோட்டாவிற்கு வாக்களிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி பிரசாரம் செய்து இருந்தால் அது நிச்சயம் மோசமான அரசியலாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.