“தி.மு.க. என்னும் தீய சக்தியை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட நான் தயார்” என தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை முன் கூட்டியே தொடங்கிவிட்டார்கள். மழை காரணமாக காலம் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழை காரணமாக பணிகள் முடிக்கவில்லை என சொல்லி இருக்க வேண்டும். கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம். செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதில் எந்தத் தவறு இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதில், தி.மு.க.வின் செயல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால், மாட்டிக்கொள்ளும்.
குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பேரணி நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றுள்ளது. வழக்கமாக எப்போதும் இந்த பேரணி நடைபெறும். அதனால் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல் தான் கவர்னர் பதவியும் என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான். அதேநேரம், திமுக வரம்பு மீறி செயல்படுகையில், மூக்கணாங்கயிறு போல ஆளுநர் தேவைதான்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.
தி.மு.க. என்னும் தீய சக்தியை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் கூட்டணிக்கு வர வேண்டும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM