தமிழக அரசு தற்போது மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மோட்டார் வாகன விதிகளில் ஏற்கெனவே இருந்த அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் பத்தாயிரம் ரூபாயும், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதில், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் போட வேண்டும், இல்லையென்றால் அதற்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அதில் எத்தனை பேர் பயணிக்கிறார்களோ அவர்களுக்கும் அதே தண்டனை தொகை அபராதமாக வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் போக்குவரத்து அபராத தொகை உயர்வு குறித்துப் பேசினோம். நம்மிடம் பேசியவர், “இந்த அபராதத் தொகையை நிர்ணயம் செய்தது, சட்டத் திருத்தத்தை மாற்றியமைத்தது அனைத்தும் ஒன்றிய அரசுதான். இதனால் காவலர்களே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் சட்டத் திருத்தத்துக்கு கட்டுப்பட்டு வேகமாக வாகனத்தில் வருபவர்கள், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள்மீது மட்டும்தான் ஒன்றிய அரசு நிர்ணயித்த அபராதத் தொகையை விதித்து வருகிறோம்” என்றார்.