தங்கைகளுக்கு பிரச்னை என்றால் வேட்டியை மடித்து கட்டி வந்து நிற்பேன்: மணமகன்களுக்கு விஷால் எச்சரிக்கை

சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் நேற்று இலவச திருமணம் செய்து வைத்தார். 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத முறைப்படி திருமணங்கள் நடந்தன. விஷால் மக்கள் இயக்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவில் விஷால் பேசியதாவது: இன்று எனது குடும்பம் பெரிதாகி விட்டது. எனக்கு 11 தங்கைகள் கிடைத்திருக்கிறார்கள். தங்கை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த மணமகள்களை எனது தங்கை போல பார்க்கிறேன். தங்கைகளை நல்ல முறையில் மாப்பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை பண்ணினால் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வந்து நிற்பேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன். இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளின் கல்வி செலவை எனது தேவி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும்.

மக்கள் நல இயக்கம் எந்த நோக்கமும் இல்லாமல் சமுதாய பணியாற்றி வருகிறது. நல்ல நோக்கம் இருப்பவ்கள் என்னுடன் வாருங்கள் என்று அழைக்கிறேன். பல கைகள் சேர்ந்தால்தான் நல்ல விஷயங்களை நடத்தி காட்ட முடியும். இவ்வாறு பேசினார் விஷால்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.